குத்தகை வீட்டை அடமானம் வைக்கும் மோசடி கும்பல் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
குத்தகை வீட்டை அடமானம் வைக்கும் மோசடி கும்பல் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 28, 2024 10:30 PM
சென்னை:குத்தகைக்கு எடுக்கும் வீட்டை அடமானம் வைத்து மோசடி செய்யும் கும்பல்கள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேர் ஏரிக்கரை திட்டத்தில் வசிக்கும் கனகராஜ், தனக்கு சொந்தமான ஐந்து வீடுகளை, ராமலிங்கம் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்.
கனகராஜுக்கு தெரியாமல் வீடுகளை அடமானம் வைத்து பெரும் தொகையை பெற்று கைதான ராமலிங்கம், பல்வேறு உத்தரவாதங்கள் அளித்து, நிபந்தனை ஜாமின் பெற்றார். அதை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கனகராஜ் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, 'இதுபோன்று பல நுாதன மோசடிகள் நடப்பதால், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்டார். அதன்படி, அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
வீடுகளை குத்தகைக்கு எடுத்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு தெரியாமல், அடமானம் வைத்து மோசடி செய்யும் கும்பல்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
சென்னை போலீஸ் கமிஷனர் அதிகார எல்லைக்குள் மட்டும், 40 வழக்குகள் பதிவாகியுள்ளன; 7 கோடி ரூபாய்க்கு மேலான மோசடியில், 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அதிகார எல்லைக்குள் பதிவான ஒன்பது வழக்குகளில், 13 கோடி ரூபாய்க்கு மேலாக மோசடி நடந்துள்ளது; 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் அதிகார எல்லைக்குள் நான்கு வழக்குகளில், 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது; 20 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதில், 1,020 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 41 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
பின், நீதிபதி
பிறப்பித்த உத்தரவு:
இந்த அறிக்கையை பார்த்தால், 65 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது தெரிகிறது. மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், அடுத்தவரின் சொத்தை அடமானம் வைத்து பணத்தை சுருட்டிய பின், இது சிவில் பிரச்னை என்று திசை திருப்பி வழக்கை இழுத்தடிக்கின்றனர்.
சட்டத்தை பற்றி தெளிவாக போலீஸ் அதிகாரிகள் புரிந்து கொள்ளாததால், 2013ல் பதிவான மோசடி வழக்கில் கூட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் உள்ளனர்.
எனவே, இதுபோன்ற மோசடி வழக்குகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமாக உள்ளன. ஆகையால், இந்த மோசடி கும்பல் மற்றும் மோசடி குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக, அரசும் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழக்கில் தமிழக டி.ஜி.பி.யை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறேன். இதுபோன்ற மோசடியை, அவர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமலிங்கம் தரப்பில் பணத்தை திருப்பிக் கொடுத்து பிரச்னைக்கு தீர்வு காண ஆறு மாதம் அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கிறேன்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

