ADDED : ஏப் 24, 2024 09:07 PM
சென்னை:ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை, நான்கு மாதங்களில் முடிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 பிப்ரவரியில், திண்டுக்கல்லில் ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து, கூட்டம் நடத்தியதாக, வைகோ, திண்டுக்கல் மாவட்டச் செயலர் செல்வராகவனுக்கு எதிராக, திண்டுக்கல் நகர வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வைகோ, செல்வராகவன் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை, நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளதால், நான்கு மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி, திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

