பட்டியல் இனத்தவர் நிலம் தாரைவார்ப்பு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
பட்டியல் இனத்தவர் நிலம் தாரைவார்ப்பு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : மே 11, 2024 08:19 PM
சென்னை:ஈரோடில் பட்டியலின சமுதாயத்தினர் தொழில் துவங்க ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில், தனியார் நிறுவனங்கள் கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., கவுன்சில் தேசிய ஒருங்கிணைப்பாளர் கவுதம சித்தார்த்தன் தாக்கல் செய்த மனு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள ஈங்கூர் தொழில் வளர்ச்சி மையத்தில், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பின்னலாடை தொழிற்சாலைகள் அமைக்க, 'தாட்கோ' என்ற, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு தொழில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடம் இருந்து 150.35 ஏக்கர் நிலத்தை, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியது. இதற்கென, 1995ல் 203 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
தாட்கோவிடம், 2003ல் ஒப்படைக்கப்பட்ட இந்த நிலத்தில், 200 கொட்டகைகள், ஆழ்துளைக் கிணறு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
பின், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலத்தில் எந்த தொழில் நிறுவனங்களும் துவக்கப்படாததால், அந்த நிலத்திலுள்ள கட்டுமானங்கள் சேதமடைந்து விட்டன.
மொத்தம் உள்ள 150.35 ஏக்கர் நிலத்தில், 48.78 ஏக்கர் நிலத்தை, 2021ல் திருப்பூர் மற்றும் ஈரோடைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு, சிப்காட் என்ற தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகம் ஒதுக்கீடு செய்தது.
நில ஒதுக்கீடு தொடர்பாக, எவ்வித பொது அறிவிப்பு வெளியிடாமல், தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்தது தன்னிச்சையானது. இவ்விவகாரத்தில், கடந்தாண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் இந்த நிறுவனங்கள் பின்பற்றவில்லை. எனவே, இந்த நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.