ரயிலில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் ஐ.டி., வாலிபர் கைது
ரயிலில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் ஐ.டி., வாலிபர் கைது
ADDED : ஆக 30, 2024 10:56 PM
சென்னை:ஓடும் ரயிலில், ஐ.டி., பெண் ஊழியரை பாலியல் சீண்டல் செய்தது தொடர்பாக, ஐ.டி., ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில், கடந்த 26ம் தேதி, ஐ.டி., பெண் ஊழியர் ஒருவர் பயணித்தார். காட்பாடி பகுதியை ரயில் கடந்த போது, அந்த பெண்ணிடம் இருந்த மொபைல் போனை, அதே ரயிலில் பயணித்த இளைஞர் பறித்துக்கொண்டு ஓடினார்.
மொபைல்போன் பறித்த வாலிபரும், அவருடன் இருந்த மற்றொரு வாலிபரும் இணைந்து, ஐ.டி., பெண் ஊழியரை ரயிலின் கழிப்பறைக்குள் தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, ரயில்வே தனிப்படை போலீசார் வழக்கு பதிந்து, அடையாளம் காணப்பட்ட மூன்று வாலிபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நாமக்கல்லை சேர்ந்த கிஷோர், 24, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இவர், சென்னை ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.