'லோக்சபாவில் தி.மு.க., பலம் குறைந்தால் தமிழரை பா.ஜ., செல்லா காசாக்கி விடும்' ஸ்டாலின் அறிக்கை
'லோக்சபாவில் தி.மு.க., பலம் குறைந்தால் தமிழரை பா.ஜ., செல்லா காசாக்கி விடும்' ஸ்டாலின் அறிக்கை
ADDED : ஏப் 16, 2024 09:46 PM
சென்னை;'லோக்சபாவில், நம் பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ., அரசு செல்லாக் காசாக்கி விடும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திற்கு ஏற்படப் போகிற பாரதுாரமான பாதகம், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், எம்.பி.,க்களின் எண்ணிக்கையை உயர்த்துவது தான். தமிழகம் உள்ளிட்ட மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிப்பதற்கு போடப்படுகிற அச்சாரம்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், 888 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்பட்டிருப்பது, நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.
மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்கு தண்டனையும், கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாக செயல்பட்டதற்காக, நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா?
தமிழகத்தின் கோரிக்கைகளை, உரிமை குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காக கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
இதில், லோக்சபாவில் நம் பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ., அரசு செல்லா காசாக்கி விடும்.
வரிப் பகிர்வில் ஏற்கனவே பாரபட்சமான அநீதியை சந்தித்து கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளை பறித்து, தமிழகத்தின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

