வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிந்தால் இனி உரிமையாளரே பொறுப்பு
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிந்தால் இனி உரிமையாளரே பொறுப்பு
ADDED : ஆக 28, 2024 11:27 PM
சென்னை:'வீட்டுவசதி வாரிய திட்ட பகுதிகளில், பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை, மறுமேம்பாடு செய்வதற்காக புதிய கொள்கை வெளியிடப்படும்' என்ற அறிவிப்பை, அரசின் வீட்டு வசதி வாரியம் கைவிட்டுள்ளது.
தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இத்திட்டங்களில், குலுக்கல் முறையில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. வீடு ஒதுக்கீடு பெற்று, முழு தவணையையும் செலுத்தியவர்களுக்கு, அவர்கள் பெயரில் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த குடியிருப்புகள் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, வீட்டுவசதி வாரியத்தின் ஒத்துழைப்பை, வீட்டு உரிமையாளர்கள் கோரினர். அதை ஏற்று, உரிமையாளர்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.
இதற்காக, சென்னை, கோவையில், 60 குடியிருப்பு வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டன. இத்திட்டத்தை செயல்படுத்த, 'பழைய குடியிருப்பு மறுமேம்பாட்டுக்கு புதிய கொள்கை வெளியிடப்படும்' என, 2022 - 23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டுவசதி வாரிய பழைய குடியிருப்பு மறுமேம்பாட்டு பணிகளை, உரிமையாளர்கள், ஒப்பந்த நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளலாம். இதில், வாரியம் பங்கேற்க, புதிய கொள்கை எதுவும் தற்போது தேவையில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
எனவே, புதிய கொள்கை தொடர்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்கள், பாதுகாப்பு சட்டத்தில் உள்ள வழிமுறைகள் அடிப்படையில் செயல்பட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய கொள்கை அவசியம்
வீட்டுவசதி வாரிய பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் சிதிலமடையும் நிலையில் உள்ளன. உரிமையாளர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து, ஒரு நிறுவனத்தை தேர்வு செய்வதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில், மறுமேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளராக, வீட்டுவசதி வாரியம் செயல்பட புதிய கொள்கை வெளியிடப்பட வேண்டியது அவசியம். பின்வாங்கியது சரியல்ல.
வாரியத்தில் போதிய அளவில் தொழில்நுட்ப வல்லுனர்கள் இல்லாததே, குளறுபடிக்கு காரணம்.
குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டப்படி, மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தால், மறுமேம்பாடு திட்டங்களை செயல்படுத்தலாம். வீட்டு உரிமையாளர்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை வல்லுனர்களை பயன்படுத்த முன்வர வேண்டும். இருப்பினும், வீட்டுவசதி வாரியம், தங்கள் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
- பி.பாலமுருகன்
கட்டட அமைப்பியல்
பொறியாளர்.