'செயற்கை பானங்கள் குடித்தால் கண் பார்வையை இழப்பீங்க!'
'செயற்கை பானங்கள் குடித்தால் கண் பார்வையை இழப்பீங்க!'
ADDED : ஏப் 23, 2024 08:07 PM
சென்னை:'கோடை காலத்தில் செயற்கை பானங்களை அதிகம் பருகினால், கண் பார்வை பாதிக்கப்படும்' என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கோடை கால பாதிப்பில் இருந்து கண்களை பராமரிப்பது குறித்து, டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை, மருத்துவ சேவைகள் துறையின் பிராந்திய தலைவர் சவுந்தரி கூறியதாவது:
பருவ காலங்கள் மாறும்போது அடுத்தடுத்த பருவத்துக்கு ஏற்ற நோய்த்தொற்றுகளும் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், கோடை வெப்பம் அதிகரிக்கும்போது, கண்கள் நேரடியாக பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதை அலட்சியப்படுத்தினால் பார்வைத்திறன் குறையும்.
அந்த வகையில், சில வாரங்களாக உலர் விழி, கண் அழற்சி, ஒவ்வாமை, புறஊதா கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கண்கள் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்க வேண்டும். அதற்கான கண்ணீர் சுரப்பிகள் வற்றும்போது, உலர் விழி பிரச்னை ஏற்படுகிறது. இதை சொட்டு மருந்துகளால் சரி செய்யலாம்.
அசுத்தமான கைகளால் கண்களை தொடுவதால், கண்ணிமைக்கு உள்ளிருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்பட்டு, இளஞ்சிவப்பு கண் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு, கண்புரை, விழிப்புள்ளி சிதைவு, போட்டோகரட்டாடிஸ் உள்ளிட்ட பலவித கண்நோய்களை உண்டாக்கும். இதிலிருந்து தப்பிக்க, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் கண்ணாடிகளை அணிவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தலாம்.
அதேநேரம், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை அருந்தக்கூடாது. அவ்வாறு தொடர்ந்து அருந்தினால் கண் பார்வை பாதிக்கப்படும். கம்ப்யூட்டர், மொபைல் போன்களை பயன்படுத்தும்போது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, அதிலிருந்து விடுபட்டு, 20 அடி தொலைவில் உள்ள பொருளை, 20 நொடிகள் பார்க்க வேண்டும். இதனால், டிஜிட்டல் ஒளியால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

