ADDED : ஏப் 17, 2024 09:34 PM
சென்னை:''விவிபேட் இயந்திரத்தில் சின்னம் தவறாக தெரிகிறது என, பொய் கூறினால், அவர் மீது வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேரத்ல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.
அவர் கூறியதாவது:
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கு அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், மக்கள் தாங்கள் எந்த சின்னத்திற்கு ஓட்டளித்தோமோ, அந்த சின்னம் அச்சாவதை பார்க்கும் வசதி கொண்ட, 'விவிபேட்' இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சின்னம் அச்சாவது, ஏழு வினாடிகள் நமக்கு தெரியும்.
வாக்காளர் தாங்கள் ஓட்டளித்த சின்னத்திற்கு பதில், வேறு சின்னம் தெரிவதாக புகார் தெரிவித்தால், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், மாதிரி ஓட்டு போட்டு பரிசோதிப்பார். புகார் உண்மையாக இருந்தால், ஓட்டுப்பதிவு இயந்திரம் மாற்றப்படும். அதேநேரம், சம்பந்தப்பட்ட நபர் பொய் கூறியது தெரியவந்தால், அவர் போலீசிடம் ஒப்படைக்கப்படுவார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

