விருப்பம் இருந்தால் வாங்க இல்லாவிட்டால் போங்க! ஊராட்சிகளுக்கு அமைச்சர் நேரு வாய்ப்பு
விருப்பம் இருந்தால் வாங்க இல்லாவிட்டால் போங்க! ஊராட்சிகளுக்கு அமைச்சர் நேரு வாய்ப்பு
ADDED : ஆக 29, 2024 10:11 PM
திருச்சி:''சென்னையில், 50 செ.மீ., மழை பெய்தாலும், அதை சமாளிப்போம். கூடுதல் மழையை தாக்குபிடிக்கும் அளவுக்கு மாநகராட்சி பகுதிகளில் பணிகள் நடக்கின்றன,'' என, அமைச்சர் நேரு கூறினார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையை தொடங்கி வைத்த, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
திருச்சி, பஞ்சப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள், வரும் டிசம்பருக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம். சென்னை மாநகராட்சியில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை, அனைத்து கால்வாய்களிலும் துார் வார பயன்படுத்தப்படுகிறது. 20 முதல் 25 செ.மீ., மழை பெய்தால் கூட தாக்குப் பிடிக்கும் அளவிற்கு, மாநகராட்சி பகுதிகளில் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 செ.மீ., மழை பெய்தால் கூட, அதையும் சமாளிப்போம்.
திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு, சில ஊராட்சி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. விருப்பம் உள்ள ஊராட்சிகள் இணைந்து கொள்ளலாம். இல்லாவிட்டால், பழைய நிலையிலேயே இருந்து கொள்ளலாம். நாளுக்கு நாள் மாநகராட்சி மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதே சமயம், வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதை முன்னிட்டே, மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு, அரசு முடிவு எடுத்துள்ளது. யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க மாட்டோம். சமயபுரம், மண்ணச்சநல்லுார், மாந்துறை, லால்குடி உள்ளிட்ட பகுதிகள், மாநகராட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.