ADDED : மார் 28, 2024 12:11 AM
சென்னை:ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்பதற்காக முதற்கட்ட தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் 38 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில் மாணவர்கள் சேர, ஜே.இ.இ., பிரதான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஐ.ஐ.டி.,யில் மாணவர்கள் சேர, ஜே.இ.இ., பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கு கடுமையான பயிற்சிகள் மேற்கொண்ட பிறகே தேர்ச்சி பெற முடியும்.
அதனால், தமிழக மாணவர்களில் பெரும்பாலானோர், இந்த தேர்வில் பங்கேற்க அதிக அக்கறை காட்டுவதில்லை. அதிலும், அரசு பள்ளி மாணவர்கள் இந்த தேர்வு எழுத முயற்சிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜே.இ.இ., தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டில், ஜே.இ.இ., பிரதான தேர்வில், 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அரசு பள்ளி மாணவர்கள், 38 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளனர்.
இவர்களுக்கு, சென்னையில் சிறப்பு மையம் அமைத்து, பயிற்சி அளிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

