ADDED : ஆக 26, 2024 04:23 AM
சென்னை: 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், என்னை ஏன் இழுத்து விடுகின்றனர் என்பது தெரியவில்லை' என, இயக்குனர் நெல்சன் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வழக்கறிஞர்கள் மற்றும் ரவுடிகள் என, 27 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தேடப்பட்டு வரும் ரவுடி, 'சம்பவம்' செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு தப்பி விட்டார்.
கொலை நடந்த இரண்டு நாட்கள் கழித்து, ஜெயிலர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சனின் மனைவி மோனிஷா, மொட்டை கிருஷ்ணனுடன் மொபைல் போனில் பேசியுள்ளார். இதுகுறித்து, மோனிஷாவிடம் தனிப்படை போலீசார் விசாரித்து உள்ளனர்.
இதற்கிடையில், மொட்டை கிருஷ்ணன் போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல், மோனிஷா அடைக்கலம் கொடுத்தார். அவரின் வங்கி கணக்கில் இருந்து மொட்டை கிருஷ்ணனுக்கு, 75 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுஉள்ளது.
இது தொடர்பாக, நெல்சனிடமும் தனிப்படை போலீசார் விசாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, நெல்சன் கூறியதாவது:
ஒரு வழக்கு தொடர்பாக, மொட்டை கிருஷ்ணனிடம், மோனிஷா ஜூலை 7ம் தேதி 30 வினாடி பேசியுள்ளார். அது தொடர்பாக போலீசார் விசாரித்து, விளக்கம் பெற்றுள்ளனர். ஆனால், என்னிடம் எந்த விசாரணையும் நடக்கவில்லை; சம்மனும் வரவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாமல், என்னை ஏன் இழுத்து விடுகின்றனர் என்பது தெரியவில்லை. பணம் கைமாறி உள்ளது என்றெல்லாம், வதந்தி பரப்புவது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

