ADDED : மார் 12, 2025 05:43 AM

கோவை : மத்திய அரசு பணி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த எட்டு பேருக்கு, உடந்தையாக இருந்த வனத்துறை அதிகாரிகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் செயல்பட்டு வரும், மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் எம்.டி.எஸ்., துறையில் டெக்னீஷியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்தது.
அதற்கான எழுத்து தேர்வு, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனத்தில், பிப்., 8, 9 ஆகிய தேதிகளில் நடந்தது.
தேர்வுக்கு வந்தவர்களின் கைரேகை மற்றும் புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு இருந்தன.
இதையடுத்து, தேர்ச்சி பெற்றவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு, நேற்று முன்தினம் வன மரபியல் வளாகத்தில் நடந்தது.
எட்டு பேரின் போட்டோ, கைரேகைகள் மாறுபட்டிருந்தன. சந்தேகமடைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குநர் குஞ்ஞிக்கண்ணன், சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீஹார் மாநிலங்களைச் சேர்ந்த 21 முதல் 26 வயது வரையிலான எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
ஆள்மாறாட்டம் செய்ய, பணம் பெற்று உதவிய நபர்கள், அதிகாரிகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.