நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விசாரணை அறிக்கை தேவை: சி.பி.சி.ஐ.டி.,க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விசாரணை அறிக்கை தேவை: சி.பி.சி.ஐ.டி.,க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 26, 2024 12:35 AM

மதுரை : நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை தண்டையார்பேட்டை உதித் சூர்யா. இவர் 2019 ல் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சியடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்.,படிப்பில் சேர்ந்ததாக கண்டமனுார் போலீசார் மோசடி வழக்குப் பதிந்தனர். படிப்பை தொடர விருப்பமின்றி, விலகிக் கொள்வதாக கல்லுாரிக்கு உதித்சூர்யா கடிதம் அளித்தார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய புரோக்கராக செயல்பட்ட சென்னை கீழ்பாக்கம் தருண்மோகன் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
சி.பி.சி.ஐ.டி., தரப்பு: வழக்கில் தொடர்புடைய பெற்றோர், மாணவர்கள், புரோக்கர்களாக செயல்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களை கைது செய்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிக்கப்படும். ஓ.எம்.ஆர்.,விடைத்தாள்களை மட்டும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) வழங்கியது. விண்ணப்பித்தவர்களின் விபரங்களை வழங்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்குரிய தொழில்நுட்பம் இல்லை என மத்திய அரசு தரப்பு கூறுகிறது. சில விபரங்களை என்.டி.ஏ.,விடம் கோரினால் என்.ஐ.சி.,யிடம் உள்ளதாக கூறுகிறது.
மத்திய அரசு தரப்பு: துவக்கத்தில் நீட் அப்போதைய தொழில்நுட்ப வசதி அடிப்படையில் நடத்தப்பட்டது. தற்போது அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் நீட் நடத்தப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி.,கோரிய விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: தற்போது விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சி.பி.சி.ஐ.டி.,தரப்பில் ஆக.2ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

