சட்டசபை தேர்தலுக்குள் திட்டங்கள் செயலாக்கம் மானிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற திட்டம்
சட்டசபை தேர்தலுக்குள் திட்டங்கள் செயலாக்கம் மானிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற திட்டம்
ADDED : பிப் 22, 2025 09:43 PM
சென்னை:சட்டசபை தேர்தலுக்குள் திட்டங்கள் அனைத்தும் செயலாக்கம் பெறும் வகையில், அனைத்து துறை மானிய கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற, அரசு முடிவெடுத்துள்ளது.
சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், அதன் மீது குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வரை விவாதம் நடக்கும்.
இதை தொடர்ந்து, பட்ஜெட்டில் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உறுதி செய்யும் வகையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் துவங்கும்.
அப்போது, துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விளக்கம் கேட்பர். அதற்கு, துறை அமைச்சர்கள் பதில் சொல்வர்.
பின்னர், மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து, துறையில் செயல்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடுவர். இதைத்தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
அதன்பிறகே, துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உறுதி செய்யப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆண்டுக்கு 25 நாட்கள் கூட, சட்டசபையை நடத்துவது இல்லை என்ற புகார் உள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, நடப்பாண்டு பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை தாக்கலின் போது, பொது மக்களை கவரும் வகையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
திட்டம் அறிவிக்கப்பட்ட பின், நிதி ஒதுக்கீடு பெற்று, ஒப்பந்ததாரரை தேர்வு செய்து பணியை துவங்குவதில் காலதாமதம் ஏற்படும். இதனால், தேர்தலுக்குள் பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாது.
எனவே, நடப்பாண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் மானிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அரசு திட்டமிட்டுஉள்ளது.
அதற்கேற்ப திட்ட தயாரிப்பு பணிகளை விரைந்து முடித்து, நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பும்படி, அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.