மக்கள் மீது சின்னத்தை திணிக்கின்றனர்: இயக்குனர் தங்கர்பச்சான் குற்றச்சாட்டு
மக்கள் மீது சின்னத்தை திணிக்கின்றனர்: இயக்குனர் தங்கர்பச்சான் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 19, 2024 01:32 AM
விருத்தாசலம் : கடலுார் லோக்சபா தேர்தலில், பா.ம.க., சார்பில் போட்டியிட்ட இயக்குனர் தங்கர்பச்சான், விருத்தாசலம் விருத்தகதீஸ்வரர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க.,வை 38 இடங்களில் வெற்றி பெறச் செய்தனர். அவர்கள் இதுவரை என்ன செய்தனர். தற்போது 40 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் என்ன சாதிக்க போகின்றனர்.
தி.மு.க., கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் நின்ற 75 சதவீதம் பேர் நடப்பு தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் ஒருமுறை கூட மக்களை சந்தித்தது இல்லை. மேலும், அவர்களது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கூட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு செலவு செய்தது இல்லை.
மக்கள் மீது சின்னத்தை திணிக்கின்றனர். தி.மு.க., என்றால் உதயசூரியன். அ.தி.மு.க., என்றால் இரட்டை இலை என மக்கள் பார்க்கின்றனர்.
ஆனால், அந்த சின்னத்தில் நிற்கக்கூடிய ஆட்கள் சரியான ஆட்களா என்று பார்த்து ஓட்டு போடுவதில்லை. ஒவ்வொரு சின்னத்திற்கு பின்னால் நேர்மையற்றவர்கள் ஒளிந்துள்ளனர்.
கடலுார் லோக்சபா தொகுதியில் தோல்வியுற்ற நான் மக்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வெற்றி பெற்றவரை எங்கு சென்று பார்ப்பீர்கள். அவர் எங்கு இருக்கின்றார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் உங்களுக்கு உதவ போகிறார்களா?
இது எனது மண்: என்னுடைய மக்கள்; என்னுடைய நிலம்; நான் இங்கேதான் கிடப்பேன், நான் கலை, அரசியல் ஆகிய இரண்டிலும் பயணிக்க போகிறேன்.
இங்குள்ள செம்மண் பூமியில் விளையக்கூடிய பலா, முந்திரிக்கு சரியான விலை கிடைக்கவில்லை. ஆனால் இதே வளத்தை வைத்து, வேறு இடங்களில் கோடீஸ்வரர்களாக மாறி கொண்டிருக்கின்றனர்.
எனவே, பலா, முந்திரி வீழ்ச்சியை அரசு சரி செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் இதனை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுகின்றனர். அதேபோல், தமிழக அரசும் செய்ய வேண்டும் என்றார்.
பின்னர் விருத்தாசலம் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

