திண்டுக்கல்லில் வனத்துறை,மாணவர்கள் இணைந்து யானைகள் கணக்கெடுப்பு
திண்டுக்கல்லில் வனத்துறை,மாணவர்கள் இணைந்து யானைகள் கணக்கெடுப்பு
ADDED : மே 23, 2024 08:57 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறையோடு கல்லுாரி மாணவர்கள்,தன்னார்வலர்கள் இணைந்து மூன்று நாட்கள் நடக்கும் யானைகள்
கணக்கெடுக்கும் பணியை நேற்று முதல்நாளாக தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் யானைகளை கணக்கெடுக்க மத்திய வனத்துறை அமைச்சகம் அந்தந்த மாநில வனத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. தமிழகத்தில் மே 23,24,25 மூன்று தினங்கள் யானைகள் வாழும் மாவட்டங்களில் யானைகள் கணெக்கெடுக்கும் பணி நடத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று நடக்கும் யானைகள் கணக்கெடுக்கும் பணியானது யானைகள் இருக்கும் பகுதியான கன்னிவாடி,ஒட்டன்சத்திரம்,வத்தலக்குண்டு பகுதிகளில் தொடங்கியது. காந்திகிராம பல்கலை.,,பழநியாண்டவர் கல்லுாரி
மாணவர்கள்,தன்னார்வலர்கள்,வனத்துறையோடு இணைந்து வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் வழித்தடங்களில் ஆய்வு செய்தனர்.
மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையில் உதவி வனப்பாதுகாவலர் நிர்மலா,ரேஞ்சர்கள் ஆறுமுகம்,ராஜா,ராம்குமார் உள்ளிட்டஅதிகாரிகள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று வனப்பகுதிகளில் நடந்த ஆய்வில் கண்பார்வையில் படும் யானைகளை மட்டும் கணக்கெடுத்தனர். 2வது நாளான இன்று யானைகளின் எச்சம்,சாப்பிட்டு விட்டு செல்லும் உணவு மீதிகள்,செல்லும் வழித்தடங்களில் உள்ள கால் தடங்களை வைத்து எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. 3வது நாளான நாளை யானைகளுக்காக வனத்துறை சார்பில் வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் மறைவான பகுதிகளில் நின்று தண்ணீர் குடிக்க வரும் யானைகளை கணக்கெடுக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

