மாம்பழ சீசன் தாமதம்; காய்களை பறித்து விற்கும் வியாபாரிகள்
மாம்பழ சீசன் தாமதம்; காய்களை பறித்து விற்கும் வியாபாரிகள்
UPDATED : மே 01, 2024 05:51 AM
ADDED : மே 01, 2024 12:41 AM

சென்னை:பல மாவட்டங்களில் மாம்பழ சீசன் களைகட்டாத நிலையில், தொழில் போட்டியால் காய்களை பறித்து வியாபாரிகள் விற்பனை செய்துவருகின்றனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாம்பழம் விளைகிறது. பல்வேறு மாவட்டங்களின் தேவைக்காக, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் முதல் வாரம் மாம்பழ சீசன் துவங்கி விடும். மாத இறுதியில் சீசன் களைகட்டும்.
'அல்போன்சா, மல்கோவா, ஜவாரி, பெங்களூரா, பங்கனபள்ளி, செந்துாரா, காலாப்பாடி' என, பல ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வரும். இறுதியாக, 'ருமானி'யும், அதைதொடர்ந்து,' நீலம்' மாம்பழமும் விற்பனைக்கு வந்தால், சீசன் முடிந்தது என்று அர்த்தம்.
இந்த இரு ரக மாம்பழங்கள் சீசன், ஜூலை இறுதி வரை இருக்கும். ஆனால், நடப்பாண்டு மாம்பழ சீசன் இன்னும் களைகட்டவில்லை. இப்போது தான் செங்காய் பருவத்தை மாம்பழங்கள் நெருங்க துவங்கியுள்ளன. அதனால், தரமான மாம்பழங்களை சுவைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
தொழில் போட்டி காரணமாக, மாமரங்களை ஏலம் எடுத்த வியாபாரிகள், காய்களை பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
சந்தைக்கு வரும் மாங்காய்களை ரசாயன பொருட்கள் வாயிலாக பழுக்க வைத்தும், விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாம்பழங்களில் நிறம் மட்டுமே இருக்கும்; சுவை இருக்காது. இவற்றை சாப்பிடுவதால் உடல் உபாதை ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டு வீசிய, 'மிக்ஜாம்' புயல் காரணமாக, திருவள்ளூர் மற்றும் அதையொட்டிய ஆந்திர மாநில பகுதிகளில், மாமரங்கள் மகசூல் குறைந்துள்ளது.
மழை குறைவால் தண்ணீர் பற்றாக்குறை, வெப்பம் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், நடப்பாண்டு மாமரங்கள் அதிகளவில் பூக்கவில்லை.
இதனால், நடப்பாண்டு மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளது. கால தாமதமாக பூவெடுத்துள்ள மரங்களில், மே இரண்டாவது வாரத்திற்கு பின் அறுவடை துவங்கும். அப்போது தான், தரமான, சுவை மிகுந்த மாம்பழங்களை சாப்பிட முடியும். இந்தாண்டு, முன்கூட்டியே சீசன் முடிய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணிவண்ணன்,
விவசாயி மற்றும் வியாபாரி,திருவள்ளூர் மாவட்டம்