தமிழகத்தில் வெப்ப அலை மூன்று பேர் மயங்கி விழுந்து பலி
தமிழகத்தில் வெப்ப அலை மூன்று பேர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஏப் 19, 2024 10:35 PM
சென்னை:தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, தபால் ஓட்டு கொண்டு வரப்பட்டது. தபால் ஓட்டு செலுத்த முன்னதாக, படிவம் 12டி பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இது குறித்து, பெரும்பாலான முதியோருக்கு போதியளவில் விழிப்புணர்வு இல்லாததால், சென்னை உட்பட பல இடங்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டுகள் குறைந்த அளவில் தான் பதிவாகின.
அதேநேரம், தபால் ஓட்டு அளிக்க முடியாத முதியோர், ஓட்டுச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று நேற்று ஓட்டுப்பதிவு செய்தனர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஓட்டு போடச் சென்ற சின்னபொன்னு, 77; பழனிசாமி, 65, ஆகியோர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நெமிலி கிராமத்தைச சேர்ந்தவர் கனகராஜ், 71. இவர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி ஓட்டுச்சாவடிக்கு சென்று, அடையாள அட்டையை காட்டிவிட்டு, ஓட்டளிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து இறந்தார்.
தமிழகத்தில் சேலம், ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுவதால், முதியோர் இருவரும் வெயில் பாதிப்பால் உயிரிழந்தனரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பந்தல், குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பல இடங்களில், ஓ.ஆர்.எஸ்., என்ற உப்பு, சர்க்கரை குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், முதியோர் வரிசையில் காத்திருக்காமல் தான் ஓட்டளித்தனர். ஆனால், இரண்டு முதியோர் இறந்த காரணம் குறித்து, அந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழப்பு காரணத்திற்கான மருத்துவ பரிசோதனை அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதால், பொது சுகாதாரத்துறை வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முதியோர் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக, பகல் 11:00ல் இருந்து, 3:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அத்துடன், ஓ.ஆர்.எஸ்., குடிநீர், அதிகளவு குடிநீர் போன்றவற்றை அவ்வப்போது முதியோர் முதல் அனைவரும் அருந்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

