ADDED : ஜூன் 20, 2024 10:02 PM
சென்னை:விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு, எந்த விரலில் 'மை' வைப்பது என, தேர்தல் கமிஷனிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 10ம் தேதி, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலில் ஓட்டளித்த வாக்காளர்களுக்கு, அவர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. அந்த மை இன்னும் பலருக்கு அழியாமல் உள்ளது. எனவே, விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு, எந்த விரலில் மை வைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு, அவர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். தேர்தல் முடிந்ததும், ஏதேனும் ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டால், அந்த ஓட்டுச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு, அவர்கள் இடது கை நடு விரலில் மை வைக்கப்படும்.
தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களில் அடுத்த தேர்தல் வந்தால், எந்த விரலில் மை வைக்க வேண்டும் என்ற விபரம் எதுவும் விதிகளில் இல்லை. எனவே, தேர்தல் கமிஷனிடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

