'வடலுார் சத்திய ஞானசபைக்கு சொந்தமான 34.80 ஏக்கர் நிலங்கள் யார் பெயரில் உள்ளது'
'வடலுார் சத்திய ஞானசபைக்கு சொந்தமான 34.80 ஏக்கர் நிலங்கள் யார் பெயரில் உள்ளது'
ADDED : செப் 06, 2024 02:57 AM
சென்னை:'வடலுார் சத்திய ஞானசபைக்கு சொந்தமான, 34.80 ஏக்கர் நிலங்கள் யார் பெயரில் உள்ளன என்பது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, கடலுார் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம் வடலுாரில், பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வின் ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலர் வினோத் ராகவேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆதரவு தெரிவித்தும், தமிழ்வேங்கை உள்ளிட்ட பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கடலுார் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
பின், அவர் வாதாடியதாவது: வடலுார் சத்திய ஞானசபைக்கு தானமாக வழங்கப்பட்டு ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை கண்டறிய, ஐகோர்ட் உத்தரவின்படி, கடந்த 28ம் தேதி, 10 அதிகாரிகள் அடங்கிய குழுவை மாவட்ட கலெக்டர் அமைத்துள்ளார். அக்குழு, வருவாய் மற்றும் அறநிலைய துறை வழங்கிய ஆவணங்களின்படி, கள ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.
வடலுாரில் உள்ள, 107.20 ஏக்கர் நிலம், 'வள்ளலார் தெய்வ நிலையம்' என்ற பெயரில் பதிவாகி உள்ளது. கடந்த 1975க்கு பின், 71.20 ஏக்கர் நிலம் மட்டும், 'திரு அருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள, 34.80 ஏக்கர் நிலங்களுக்கு தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிலங்களில், தற்போது கடைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. மாவட்ட கலெக்டர் அளித்தது ஆரம்ப கட்ட அறிக்கை.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தனி நபர்கள் பெயருக்கு 34.80 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கி இருந்தால், அது சட்ட விரோதம்.
இந்த நிலங்கள், 1975க்கு பின் யார் பெயரில் உள்ளன; தற்போது யாரிடம் உள்ளது என்பதை கண்டறிந்து, அவர்களின் பெயர், முகவரி உள்பட அனைத்து விபரங்களுடன் வரும் 12ம் தேதிக்குள், கடலுார் மாவட்ட கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை அடையாளம் காண, கலெக்டர் அமைத்த குழுவில், குறிஞ்சிப்பாடி, வடலுார் சார் பதிவாளர்களை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்பின், சர்வதேச மையம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் அருகே அசம்பாவித சம்பவங்களை தடுக்க, காலி நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேலி அமைக்க அனுமதிக்க வேண்டும் என, அறநிலையத்துறை தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு, வடலுார் சத்திய ஞானசபை அறங்காவலர், அறநிலையத்துறையுடன் கலந்தாலோசித்து, 71.20 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கலாம். தேவைப்பட்டால், போலீசாரின் பாதுகாப்பை கோரலாம் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.