ADDED : ஆக 07, 2024 09:49 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 3 நாட்களாக பெய்து வரும் பரவலான மழையால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 621 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 763 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்கு, 185 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 242 கன அடி என மொத்தம், 427 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.80 அடியாக இருந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஊத்தங்கரையில், 33.40 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், பாம்பாறு அணை - 16 மி.மீ., போச்சம்பள்ளி - 8.10, பாரூர், தளி - 5, நெடுங்கல் - 4.20, தேன்கனிக்கோட்டை - 3, கே.ஆர்.பி., அணை - 2.40, என மொத்தம், 84 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.