ஓய்ந்தது பறக்கும் படை கெடுபிடி சந்தையில் ஜவுளி விற்பனை அதிகரிப்பு
ஓய்ந்தது பறக்கும் படை கெடுபிடி சந்தையில் ஜவுளி விற்பனை அதிகரிப்பு
ADDED : ஏப் 23, 2024 08:22 PM
ஈரோடு:தேர்தலுக்கான பறக்கும் படைகள் வாபஸ் பெறப்பட்டதால், ஈரோடு ஜவுளி சந்தையில், 40 நாட்களுக்கு பின் நேற்று ஜவுளி விற்பனை சற்று அதிகரித்தது.
ஈரோடு, பி.எஸ்.பார்க் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல் கனி வணிக வளாகம் மற்றும் அதை சுற்றிய பகுதியிலும், ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்., வீதி, மணிக்கூண்டு பகுதியிலும் ஜவுளி சந்தை விற்பனை நடந்தது.
மொத்த ஜவுளி நிறுவனங்கள், சாலை ஓரக்கடைகள், வாகனங்களில் விற்பனை, குடோன் விற்பனை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த கடைக்காரர்கள், வியாபாரிகள் ஜவுளி வாங்க அதிகமாக வந்தனர்.
கோடை சீசன் விற்பனை துவங்கி நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்து, பறக்கும் படைகள் கலைக்கப்பட்டதால், வியாபாரிகள் அச்சமின்றி பணம் கொண்டு வந்தனர்.
கேரளா மற்றும் கர்நாடகாவில் தேர்தல் வரவுள்ளதால், அங்குள்ள வியாபாரிகள் பணத்தை குறைவாக கொண்டு வந்தபோதிலும், வரும் வாரங்களில் வழங்குவதாக கூறி ஜவுளிகளை வாங்கி சென்றனர்.
எல்லைகளிலும் வாகன தணிக்கை குறைந்ததால், ஜவுளிகளை எடுத்து செல்வதிலும் சிக்கல் குறைந்து, நேற்று ஜவுளி விற்பனை அதிகரித்தது.
குறிப்பாக, காட்டன், உள்ளாடைகள், விரிப்பு, துண்டு, வேட்டி, நைட்டி, குழந்தைகளுக்கான ஆடைகள் போன்றவை அதிகமாக விற்பனையானது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

