பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., மறைமுக கூட்டணி: திருமாவளவன் சந்தேகம்
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., மறைமுக கூட்டணி: திருமாவளவன் சந்தேகம்
UPDATED : ஏப் 06, 2024 05:51 PM
ADDED : ஏப் 06, 2024 04:10 PM

பெரம்பலூர்: பா.ஜ.,வுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார்.
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு ஆதரவு கேட்டு, திருமாவளவன் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் அமைப்பு சட்டமே மாற்றப்பட்டுவிடக் கூடிய பேராபத்து உள்ளது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் ஏழை எளிய மக்கள் நசுக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி போடப்படுவதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இண்டியா கூட்டணி
பா.ஜ., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்காக நமது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், இண்டியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார். மோடி ஆட்சி வந்து விட்டால் அம்பானி, அதானி போன்ற முதலாளிகளே செழிப்புடன் இருப்பார்கள். ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கப்படுவார்கள். நல்லாட்சி மலர்ந்திட, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை சுமார் 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மறைமுக கூட்டணி
அதற்கு விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் மீதமுள்ள நாட்களில் அயராது பாடுபட்டு பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க வேண்டும். மக்களை உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க செய்ய வேண்டும். பா.ஜ.,வுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது.
அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை ஏவி, தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் 6500 கோடி ரூபாயை பா.ஜ., பெற்றுள்ளது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

