தனித்துவ அடையாள எண்ணுடன் மின் மீட்டர் கொள்முதல் துவக்கம்
தனித்துவ அடையாள எண்ணுடன் மின் மீட்டர் கொள்முதல் துவக்கம்
ADDED : ஏப் 23, 2024 12:46 AM

சென்னை: தரமானதாக வாங்குவதை உறுதி செய்ய, தனித்துவ அடையாள எண்ணுடன் மீட்டர் மற்றும் டிரான்ஸ்பார்மர் கொள்முதலை, மின் வாரியம் துவக்கியுள்ளது.
தமிழக மின் வாரியம், வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தியுள்ளது.
இந்த மீட்டர், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களும், 'டெண்டர்' வாயிலாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு, பல நுாறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
அடிக்கடி 'மக்கர்'
ஒப்பந்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும்போது, தொழில்நுட்ப புள்ளியில் தேர்வாக, மாதிரிக்காக தரமான சாதனங்களை வழங்குகின்றன. அந்த தரத்திற்கு இணையாக, சாதனங்களை வினியோகம் செய்வதில்லை. இதனால், தரமற்ற சாதனங்கள் விரைவில் பழுதாகின்றன.
பிரிவு அலுவலகங்களில் பணிபுரியும் சிலர், புதிய மின் இணைப்பு வழங்க மீட்டர் உள்ளிட்ட சாதனங்கள் கையிருப்பில் இருந்தாலும், 'ஆதாயம்' எதிர்பார்த்து, 'இல்லை' என்கின்றனர். இதனால், மின் இணைப்பு வழங்கும் பணியிலும் தாமதம் ஏற்படுகிறது.
இந்த முறைகேடுகளை தடுக்க மின் வாரியம், மீட்டர், டிரான்ஸ்பார்மர், மின் கம்பத்திற்கும் தலா ஒரு, 'யுனிக்யூ ஐடியன்டிபிகேஷன் நம்பர்' எனப்படும் தனித்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை, 2023 நவம்பரில் துவக்கியது.
அதன்படி, மீட்டரில், 'கியூ ஆர் குறியீடு ஸ்கேன்' உடன், 16 இலக்கத்தில் மின் வாரியத்தை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களுடன் வரிசை எண்கள் இருக்கும். இது, டிரான்ஸ்பார்மரில், 15 இலக்கத்திலும்; மின் கம்பத்தில், 13 இலக்கத்திலும் இருக்கும்.
மின் வாரியம் வழங்கும் இந்த தனித்துவ எண்ணை அச்சிட்டு தான் ஒப்பந்த நிறுவனங்கள், சப்ளை செய்ய வேண்டும். அவை, கணினியில் பதிவு செய்யப்படும்.
துல்லியம்
இதன் வாயிலாக, அந்த எண்ணை வைத்து, எந்த நிறுவனத்திடம் வாங்கப்பட்டது, எந்த பிரிவு அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது, எந்த இடத்தில் உள்ளது, எந்த இடத்தில் பொருத்தப்பட்டது உள்ளிட்ட விபரங்களை அலுவலகத்தில் இருந்தபடி துல்லியமாக அறியலாம்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது, 11.45 லட்சம் மீட்டர்களும், 9,500 டிரான்ஸ்பார்மர்களும் தனித்துவ அடையாள எண்ணுடன் வாங்கப்பட்டுள்ளன. இதனால், சாதனம் பழுதானால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மாற்றி தரும்படி செய்வது அல்லது சரிசெய்து தர வலியுறுத்த முடியும்.
அலுவலகத்தில் கையிருப்பில் வைத்து கொண்டே, 'இல்லை' என, கூற முடியாது.
இனி அனைத்து சாதனங்களும் தனித்துவ எண்ணுடன் தான் வாங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

