வாக்காளர்கள் பெயர் நீக்கம் 'ரிசல்ட்'டுக்கு பின் விசாரணை
வாக்காளர்கள் பெயர் நீக்கம் 'ரிசல்ட்'டுக்கு பின் விசாரணை
ADDED : ஏப் 30, 2024 11:15 PM
சென்னை:வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டது தொடர்பான புகார்களை, ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் விசாரிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து, பெயர் இல்லை என்றால் விண்ணப்பிக்கும்படி, பல முறை தேர்தல் கமிஷன் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அப்போது, பலர் அமைதியாக இருந்து விடுகின்றனர். தேர்தல் நேரத்தில் பெயர் இல்லை என்கின்றனர்.
கடந்த முறை ஓட்டளித்தவர்கள் பெயர் இம்முறை நீக்கப்பட்டிருப்பதாக, பல புகார்கள் வந்துள்ளன. ஒருவர் இடம் மாறி செல்வதாக விண்ணப்பித்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்.
இதுதவிர, ஒரு வாக்காளர் அளித்துள்ள முகவரியில் இல்லை என்றாலும், பெயர் நீக்கம் செய்யப்படும். எனவே, பெயர் நீக்கம் குறித்து தனிப்பட்ட நபர்கள் அளிக்கும் புகார்கள் குறித்து, ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் விசாரிக்க,வாக்காளர் பட்டியல் தயாரிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையில் எதற்காக சம்பந்தப்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது என்பது தெரிய வரும். அதன் விபரம் அவருக்கு தெரிவிக்கப்படும். அரசியல் கட்சியினர் அளித்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பம் அளித்தால், மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.