கபாலி கோவிலில் தொழுகை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கபாலி கோவிலில் தொழுகை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : செப் 03, 2024 02:16 AM
சென்னை: 'சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பெண் ஒருவர் தொழுகை நடத்தியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, பாரத் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
அதன் மாநில செயலர் டில்லிபாபு, அறநிலையத்துறை கமிஷனரிடம் அளித்துள்ள மனு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், கடந்த மாதம் 24ம் தேதி, நீலாங்கரையை சேர்ந்த ஆயிஷாபானு என்ற பெண், தொழுகை நடத்தி உள்ளார்.
அதன் வீடியோவையும், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, கோவிலில் பணிபுரியும் பாலமுருகன், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில், கடந்த 29ம் தேதி புகார் கொடுத்துள்ளார்.
அப்புகார் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, யு டியூபில் வெளிவந்த தொழுகை வீடியோ அகற்றப்பட்டு உள்ளது.
கோவிலில் தொழுகை நடத்தியதன் உள்நோக்கம் குறித்து, போலீசார் முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பெண் விசாரணைக்கு வரும் தேதிகளில், போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை பாதுகாக்க வேண்டும். கோவில் கேமராவில் பதிவான காட்சிகளை, கோவில் நிர்வாகம் பாதுகாக்க வேண்டும்.
இக்கோவிலில், கடந்த ஆண்டு கிறிஸ்துவ பெண் ஒருவர், பைபிளை வைத்து ஜெபம் நடத்தினார். தற்போது, முஸ்லிம் பெண் தொழுகை நடத்தி உள்ளார்.
ஹிந்து கோவில்களில், ஹிந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.
ஹிந்து சமய அறநிலையத்துறை மெத்தனமாக இல்லாமல், விழிப்புடன் செயல்பட வேண்டும். கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கோவில்களிலும், மாற்று மதத்தை சார்ந்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டர் என, பெயர் பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.