ADDED : மே 11, 2024 12:06 AM
சென்னை:தமிழகம் முழுதும் செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகள், உரிய உரிமம் பெற்றுள்ளனவா, அங்கு தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்களுக்கு, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
சிவகாசி அடுத்த கீழதிருத்தங்கல் கிராமத்தில், நேற்று முன்தினம் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 10 பேர் இறந்தது, தமிழகம் முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் ஏற்பட்டு வரும் விபத்துக்கள், கவலையை ஏற்படுத்தி உள்ளன. தொழிற்சாலைகளை முறையாக ஆய்வு செய்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், உரிய உரிமம் பெற்றுள்ளனவா, தொழிலாளர்களுக்கு தொழிற்சாலைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. ஏற்கனவே, ஒரு சில மாவட்டங்கள் அறிக்கை அனுப்பி உள்ள நிலையில், அனுப்பாத மாவட்டங்கள், உடனடியாக அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, பெரு மற்றும் சிறு பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி, இனிமேல் விபத்துகள் ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.