ADDED : ஜூலை 25, 2024 12:34 AM
சென்னை:'வரன்முறை செய்யப்பட்ட மனைகள், நத்தம் நிலங்களில் வீடு கட்டுவோருக்கும், சுயசான்று அடிப்படையில் உடனடி கட்டட அனுமதி வழங்கப்படும்' என, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி வரை வீடு கட்டுவதற்கு சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக, உரிமையாளர் பெயரில் முறையான பட்டா, வீட்டு மனையாக அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் ஆகிய ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.
இதனால், 'அங்கீகாரம் உள்ள மனைகள் மட்டும் தான், கட்டட அனுமதி பெற முடியுமா?' என்ற, கேள்வி எழுந்தது.
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள உத்தரவு:
சுயசான்று அடிப்படையில் உடனடி கட்டட அனுமதி வழங்குவதற்காக, பொது கட்டட விதியில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், கட்டடத்தின் அளவுகள் தொடர்பான அடிப்படை விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 2017ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், வரன்முறை செய்யப்பட்ட மனைகளுக்கு உடனடி கட்டட அனுமதி வழங்கப்படும்.
இதேபோன்று, முறையான அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட உட்பிரிவு மனைகள், நத்தம் மனைகளுக்கும் உடனடி அனுமதி கிடைக்கும்.
இந்த மனைகள் அனைத்தும், 2016 அக்., 20க்கு முன் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
கடலோர ஒழுங்குமுறை மண்டலம், மலைப் பகுதி பாதுகாப்பு குழுமம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தடை செய்யப்பட்ட இடங்களில் வீடு கட்ட, இத்திட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

