ADDED : ஜூன் 02, 2024 01:03 AM
சென்னை:'ஓட்டு எண்ணும் இடத்திற்கு முதலில் செல்லும் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும், தி.மு.க., முகவர்கள் இருக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைதளப் பதிவு:
தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில், அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். செல்லாத ஓட்டுகளை செல்லத்தக்கதாகவும், செல்லத்தக்க ஓட்டுகளை செல்லாததாகவும் அறிவிப்பதை, ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
எப்படி ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுகள் முக்கியமோ, அதேபோல தபால் ஓட்டுகளும் முக்கியமானவை, எனவே, அந்த எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
இயந்திரத்தின் எண்கள் சரியாக இருக்கிறதா என்பதை, படிவம் '17 சி'யில் இருப்பதை ஒப்பிட்டு பார்த்து, அதை உறுதி செய்து கொள்ள வேண்டும். படிவத்தில் உள்ள பதிவான ஓட்டுகள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவானவற்றுடன் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம், முடிந்த நேரத்தை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அந்த இயந்திரத்தை ஓட்டு எண்ணிக்கைக்கு அனுமதிக்காமல், தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், ஒரு சட்டசபை தொகுதிக்கு, ஐந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் அச்சான ஒப்புகை சீட்டுகளை எண்ணி, இயந்திரத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
படிவம் 20ல் அனைவரும் கையொப்பமிட்டு, வெற்றி சான்றிதழ் பெறப்பட்ட பின், ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் வெளியே வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.