உளவுத்துறை எச்சரிக்கை திருமாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?
உளவுத்துறை எச்சரிக்கை திருமாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?
ADDED : ஆக 22, 2024 10:26 PM
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த, அரசுத் தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர், எதிர் தரப்பினரை கடுமையாக விமர்சித்துப் பேசும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களுக்கு அரசியல் ரீதியில் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களையும் பின்தொடர்ந்து, அவர்கள் குறித்த தகவல்களை உளவுத் துறையினர் சேகரித்து வருகின்றனர்.
அவர்கள் அரசுக்கு அனுப்பும் அறிக்கை அடிப்படையில், அதிக அச்சுறுத்தல் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை, தமிழக போலீசார் உஷார்படுத்துவதோடு, அவர்களுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்துவர். அவர்களுக்கு அச்சுறுத்தல் நீங்கி விட்டதா என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, தேவையில்லாதபட்சத்தில் போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தான், முன்னாள் கவர்னர் தமிழிசை, மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோருக்கான போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. திருமாவளவனின் சமீபத்திய பேச்சுக்கள், எதிர் தரப்பினரை கோபமூட்டி இருப்பதால், அவருக்கு அச்சுறுத்தல் அதிகமாகி இருக்கும் தகவல், உளவுத் துறை போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக, மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததும், திருமாவளவனுக்கு தற்போது வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
- நமது நிருபர் -