ADDED : ஆக 30, 2024 01:58 AM
சென்னை:கேரளாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில், கடந்த 26ம் தேதி கரூர் ரயில் நிலையத்தில், ஐ.டி., பெண் ஊழியர் ஏறி, சென்னை நோக்கி பயணித்தார். ரயில் வேலுார் அருகே காட்பாடியை கடந்த போது, அதிகாலையில் ஐ.டி., பெண் ஊழியரிடம் இருந்த மொபைல் போனை, அதே ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் பறித்து கொண்டு ஓடினார்.
பின், மொபைல் போன் பறித்த வாலிபரும், அவருடன் இருந்த மற்றொரு வாலிபரும் இணைந்து, ஐ.டி., பெண் ஊழியரை, ரயிலின் கழிப்பறைக்குள் தள்ளி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, ரயில்வே போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நான்கு எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.
கரூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையுள்ள, அனைத்து ரயில் நிலையங்களிலும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த வழக்கு தொடர்பாக, 220 பேர் விபரங்களை பெற்று விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

