ADDED : மார் 14, 2025 09:06 PM

பிரச்னைகள் தீரவில்லை வியாபாரிகள் அதிருப்தி
தமிழக அரசு அறிவித்துள்ள பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. இதில், சிறு வியாபாரிகள், தொழில் துவங்குவோரின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. வியாபாரிகள் வாடகை கட்டடத்தில் மின் இணைப்பு பெற்று கடை நடத்துகின்றனர். வேறு கட்டடத்திற்கு மாற்றும்போது மின் இணைப்பை மாற்றித்தர மின் துறை மறுக்கிறது. இதனால், அந்த கட்டடத்திற்கு புதிதாக மின் இணைப்பு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதேபோல், ஒரே கட்டடத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், ஒன்றாக மாறுதல் செய்யப்படுகிறது. இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.
-ராதாகிருஷ்ணன், மண்டல பொறுப்பாளர், விழுப்புரம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.
வியாபாரிகள் கோரிக்கை தீர்வு காணப்படவில்லை
தமிழக அரசு அறிவித்துள்ள பட்ஜெட், வியாபாரிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, சொத்துக்கள் வழிகாட்டி மதிப்பு உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி, வியாபாரிகள் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், பட்ஜெட்டில் வியாபாரிகள் கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படவில்லை.
-ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர், விழுப்புரம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
சாமி வரம் கொடுத்தாச்சி பூசாரி வழிவிடுவாரா?
தமிழக அரசு அறிவித்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் நன்மை அளிப்பதாக உள்ளது. அரசு கொண்டு வந்துள்ள நலத் திட்டங்களை, முழுமையாக செயல்படுத்தினால்தான், அடித்தட்டு மக்கள் பயன்பெற முடியும். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி மனது வைக்க வேண்டும் என்பதைப் போல், அரசு அறிவித்த திட்டங்களை அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் மக்களுக்கு கொண்டு சேர்த்தால் தான் பயன் கிடைக்கும். இந்த திட்டங்களில், 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டாலே, மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்வடையும்.
-அகமது, விழுப்புரம்.