போதை பொருள் கடத்தியதாக ஐகோர்ட் நீதிபதிக்கு மிரட்டல்
போதை பொருள் கடத்தியதாக ஐகோர்ட் நீதிபதிக்கு மிரட்டல்
ADDED : செப் 11, 2024 03:12 AM
சென்னை: போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இணையவழியில் மிரட்டல் விடுத்து, பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், 'பெடெக்ஸ் கூரியர்' நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, 'உங்கள் பெயரில் வெளிநாட்டிற்கு பார்சல் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. அத்துடன், சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் உள்ளது. இது தொடர்பாக, மும்பை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்' என, மொபைல் போன் வயிலாக தெரிவிப்பர். இணைப்பை சி.பி.ஐ., அதிகாரிக்கு தருவதாகவும் கூறுவர்.
எதிர் முனையில் பேசும் நபர், தன்னை சி.பி.ஐ., அதிகாரி என்பார். 'நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள். சிறைக்கு செல்லாமல் இருக்க, இந்த வழக்கில் இருந்து தப்பிக்க, நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும்' எனவும் கூறுவார். மொத்தத்தில், உளவியல் ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுவர்.
சில தினங்களுக்கு முன், 'வாட்ஸாப்' அழைப்பில், இன்ஸ்பெக்டர் போல பேசிய மர்ம நபர், தன் பெயரை வெளியிட விரும்பாத சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம், 'கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளீர்கள். சட்ட விரோத செயலுக்கு உங்கள் மொபைல் போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. உங்கள் மீது, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என, மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை மற்றும் மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் கூறுகையில், 'கம்போடியா நாட்டைச் சேர்ந்த மர்ம நபர்கள், ஆன்லைன் வழியில் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த கும்பலை, சி.பி.ஐ., மற்றும் குடியுரிமை அதிகாரிகளுடன் இணைந்து தேடி வருகிறோம்' என்றனர்.
***