ADDED : மார் 22, 2024 11:06 PM
சென்னை:''தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக, தனி மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில், அவர் கூறியதாவது:
நாம் தமிழர் கட்சிக்கு, 'மைக்' மற்றும் தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு, 39 பொது பார்வையாளர்கள், 20 போலீஸ் பார்வையாளர்கள், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள, 'சுவிதா' என்ற மொபைல் செயலி; மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிப்பது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள, அவர்களுக்காக, 'சாக்சம்' என்ற மொபைல் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது. நேற்று வரை சோதனையின் போது, 10.28 கோடி ரூபாய் ரொக்கம்; 68 லட்சம் ரூபாய் மதுபானம்; 35 லட்சம் ரூபாய் போதைப் பொருட்கள்; 22 லட்சம் ரூபாய் தங்கம், வெள்ளி நகைகள்; 41 லட்சம் ரூபாய் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 11.95 கோடி ரூபாய்.

