கட்டட வரைபடத்தில் கியூ.ஆர்., குறியீடு புதிய வசதி அறிமுகம்
கட்டட வரைபடத்தில் கியூ.ஆர்., குறியீடு புதிய வசதி அறிமுகம்
ADDED : ஜூலை 05, 2024 10:59 PM
சென்னை:கட்டட அனுமதி பெறும் போது, அதற்குரிய வரைபடங்களை, 'கியூ.ஆர்.' குறியீட்டுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் பொது கட்டட விதிகள் அடிப்படையில், 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் வழங்குகின்றன.
இதில், சிறிய அளவிலான வீடுகளுக்கு கட்டட வரைபட அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், வங்கிக்கடன் பெற்று தனி வீடு கட்டுவோர், சிறிய குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை எளிமைப்படுத்த, அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, சுயசான்று அடிப்படையில் உரிய சான்றிதழ்களை அளித்து, மக்கள் வீடு கட்ட அனுமதி பெறும் வகையில், புதிய திட்டம் உருவாக்கப்பட்டுளளது.
இதுபற்றி, நகரமைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 2,500 சதுரடி வரையிலான மனையில், 3,500 சதுரடி வரையில் வீடு கட்டுவதற்கு சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படும். 'ஆன்லைன்' முறையில், உரிமம் பெற்ற பொறியாளர்கள் வாயிலாக, பொதுமக்கள் கட்டட வரைபடம், ஆவணங்களை அளிக்கலாம். இதன்பின், கணினி வாயிலாக வரைபடம் சரிபார்க்கப்படும்.
இதையடுத்து, விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய கட்டணம் தெரிவிக்கப்படும். கட்டணங்களை செலுத்திய உடன், அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் கணினி வாயிலாகவே கிடைத்து விடும். இந்த வரைபடத்தில் புதிதாக கியூ.ஆர்.குறியீடு இடம் பெறும்.
அதை, 'ஸ்கேன்' செய்தால், கட்டடம் தொடர்பாக சரிபார்க்கப்பட்ட விபரங்கள் கிடைக்கும். பிற துறைகள் ஆய்வு செய்ய, இது பேருதவியாக இருக்கும். விரைவில், இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.