தேக்கடியில் சுற்றுலாப்பயணிகளை கவர இரண்டு பேட்டரி கார்கள் அறிமுகம்
தேக்கடியில் சுற்றுலாப்பயணிகளை கவர இரண்டு பேட்டரி கார்கள் அறிமுகம்
ADDED : ஜூலை 15, 2024 01:34 AM

கூடலுார்: சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தேக்கடியில் பேட்டரி கார்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்றாகும். அடர்ந்த வனப் பகுதிக்கு நடுவே தேங்கியிருக்கும் ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே வனப்பகுதியில் வனவிலங்குகளை கண்டு ரசிப்பதில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆனந்தம்.
இதனால் வெளி நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக தேக்கடி திகழ்கிறது.
படகு சவாரி செய்வதற்காக கேரள சுற்றுலாத்துறை, வனத்துறைக்கு சொந்தமான 8 படகுகள் இயக்கப்படுகின்றன. இது தவிர வனப்பகுதியில் டிரக்கிங், யானை சவாரி போன்ற வசதிகளும் உள்ளன.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவருவதற்காக தேக்கடி வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து படகு நிறுத்தப் பகுதி வரையுள்ள 3.5 கி.மீ., தூரத்திற்கு இரண்டு பேட்டரி கார்கள் இயக்க வசதி, நேற்று முதல் துவக்கப்பட்டன.
டிரைவர் உட்பட 6 பேர் பயணிக்க கூடிய வகையில் பேட்டரி கார் வடிவமைக்கப் பட்டு உள்ளன. இதில் பயணம் செய்ய தலா ரூ.ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இக்கட்டணத்தில் தேக்கடி நுழைவுக் கட்டணம், படகு கட்டணம், ஆமை பூங்காவிலிருந்து ஏரிக்கரைக்கு மலையேற்றம், மூங்கில் படகு பயணம் உள்ளிட்டவை அடங்கும். பல்வேறு நாடுகளில் இருந்து தேக்கடிக்கு வந்து பல நாட்கள் தங்கி பறவைகள், வண்ணத்துப் பூச்சிகளை பார்க்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த பேட்டரி கார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் பயணிகள் வருகையும் அதிகரிக்கும் என கேரள சுற்றுலாத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

