எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் இன்ஜி., படிப்பு அறிமுகம்
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் இன்ஜி., படிப்பு அறிமுகம்
ADDED : ஜூலை 20, 2024 02:21 AM
சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புடன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் டிசைன் என, மூன்று புதிய பாடப்பிரிவுகளுக்கு இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான படிப்புகள் மற்றும் கல்லுாரிகளுக்கான அங்கீகாரத்தை, ஏ.ஐ.சி.டி.இ., இறுதி செய்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு புதிதாக மூன்று படிப்புகளை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சேர்க்க உள்ளதாக, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் படிப்புடன், எலக்ட்ரிக்கல் அண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளும், இதுவரை 'நிப்ட்' மட்டுமே நடத்தி வந்த டிசைன் படிப்பு, இனி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 'பேச்சிலர் ஆப் டிசைன்' என, புதிதாக அனுமதிக்கப்பட்டுஉள்ளது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 2.33 லட்சம் இடங்கள் கல்லுாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் என்ற தரவு அறிவியல் ஆகிய, கணினி சார்ந்த பாடப்பிரிவுகளில் மட்டும், 1.19 லட்சம் இடங்கள் இடம் பெற்றுள்ளன.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பின் மீதான மாணவர்களின் ஆர்வம் அதிகரிப்பால், கடந்த ஆண்டைவிட இந்த முறை, 22,000 கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் படிப்பில், 1,147 இடங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
மெக்கானிக்கல், சிவில் பாடப்பிரிவுகளை சில கல்லுாரிகள் மூடிவிட்டதால், 3,000 இடங்கள் குறைந்து, 57,467 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்த ஆண்டு, 467 இன்ஜினியரிங் கல்லுாரிகள், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழியே மாணவர் சேர்க்கை நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி அளித்துள்ளது.

