காற்றாலை ஆயுள் நீட்டிப்பு கொள்கை முதலீட்டாளர்களிடம் ஆர்வம் இல்லை
காற்றாலை ஆயுள் நீட்டிப்பு கொள்கை முதலீட்டாளர்களிடம் ஆர்வம் இல்லை
ADDED : பிப் 28, 2025 01:50 AM
சென்னை:காற்றாலை ஆயுள் நீட்டிப்பு கொள்கைக்கு முதலீட்டாளர்களிடம் ஆர்வம் இல்லாததால், அந்த கொள்கை வெளியாகி ஐந்து மாதங்களாகும் நிலையில், ஒரு நிறுவனம் மட்டுமே புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளது. எனவே, தங்களின் கருத்தை கேட்டு, அதற்கு ஏற்ப புதிய கொள்கை வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர் களிடம் எழுந்துள்ளது.
தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், சொந்த மின் பயன்பாட்டுக்கும், மின்வாரியத்திற்கு விற்கவும், காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு திறனில் என, கடந்த ஆண்டு நிலவரப்படி, 10,970 மெகா வாட் திறனில் காற்றாலைகள் உள்ளன.
இவை, 1986 முதல் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஒரு காற்றாலையே அதிக திறனில் அமைக்கப்படுகிறது.
எனவே, பழைய காற்றாலைகளை புதுப்பிக்க, 'தமிழக காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024'ஐ, கடந்த ஆண்டு செப்டம்பரில் அரசு வெளியிட்டது.
இதன் வாயிலாக, பழைய காற்றாலைக்கு பதில் புதிதாக அமைக்கலாம். ஏற்கனவே உள்ள காற்றாலை திறனை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தின் வாயிலாக ஆயுளை நீட்டிக்கவும் செய்யலாம்.
இந்த கொள்கை வாயிலாக, 20 ஆண்டுகள் முடிவடைந்த 3000 மெகா வாட் காற்றாலைகள் புதுப்பிக்கப்படும் என, மின் வாரியம் எதிர்பார்க்கிறது. ஆனால், கொள்கைக்கு முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால், அந்த கொள்கை வெளியிட்டு, ஐந்து மாதங்களாகியும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே காற்றாலையை புதுப்பிக்க, மின் வாரியத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.
இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளில் காற்றாலைகள், 40 ஆண்டுகள் கடந்தும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே, தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்நுட்ப ரீதியாக காற்றாலைகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மின்சாரம் சுற்றுச்சூலை பாதிப்பதில்லை.
அரசின் காற்றாலை ஆயுள் நீட்டிப்பு கொள்கை யில், ஒரு மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய் வளர்ச்சி கட்டணம் உட்பட பல அம்சங்கள், முதலீட்டாளர்கள் ஏற்கும் வகையில் இல்லை.
எனவே, காற்றாலை துறையினர், முதலீட்டாளர்களை அழைத்து, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, அதற்கு ஏற்ப கொள்கையை அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.