டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இடஒதுக்கீட்டில் குளறுபடி
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இடஒதுக்கீட்டில் குளறுபடி
ADDED : செப் 06, 2024 02:23 AM
மதுரை:டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபிட்ஷா துர்கா தாக்கல் செய்த மனு:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 சார்பில் மார்ச் 28ல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சில பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. அவை கிடைமட்ட ஒதுக்கீட்டில் இல்லாமல் செங்குத்து ஒதுக்கீடாக செய்யப்பட்டுள்ளன.
குரூப் - 1 தகுதி பட்டியலிலும் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படவில்லை.
ஒதுக்கீடு தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையும் முறையாக அமல்படுத்தவில்லை. இட ஒதுக்கீட்டிலும் பல குளறுபடிகள் நடந்து உள்ளன.
எனவே, குரூப் - 1 அறிவிப்பில், பணியிடங்களில் நடந்த இட ஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து, இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்து இருந்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதி விஜயகுமார் ஒத்திவைத்தார்.