தி.மு.க., பக்கம் போகப் போகிறாரா? நடக்காது என்கிறார் மாஜி வீரமணி
தி.மு.க., பக்கம் போகப் போகிறாரா? நடக்காது என்கிறார் மாஜி வீரமணி
ADDED : ஆக 14, 2024 08:46 PM

ஆம்பூர்:ஆம்பூரில் நடந்த தொழிலதிபர் இல்ல திருமண விழாவில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணியுடன், வேலுார், தி.மு.க., - எம்.பி., கதிர்ஆனந்த் தனிமையில் சந்தித்து பேசினார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த தொழிலதிபர் பரிதா பாபு. தி.மு.க., பிரமுகரான இவரது இல்ல திருமண விழா, நேற்று முன்தினம் இரவு ஆம்பூரில் நடந்தது. இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், வேலுார், தி.மு.க., - எம்.பி., கதிர்ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு திருப்பத்துார், அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான வீரமணியும் வந்திருந்தார். அவருடன் கதிர்ஆனந்த் எம்.பி., கைக்குலுக்கி பேசினார். தொடர்ந்து இருவரும் தனிமையில் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர். வீரமணியை, தி.மு.க., பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என செய்திகள் வெளியாகின. இருவரும் தனிமையில் அமர்ந்து பேசுவது போல் படங்களும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து, முன்னாள் அமைச்சர் வீரமணி கூறுகையில், “ஆம்பூரில் நண்பரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டேன். அப்போது, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்துடன் ஓரிரு நிமிடம் பேசினேன். அப்போது என்னுடன், எங்கள் கட்சி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர். மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு வந்தோம். அதற்குள் செய்தியை திரித்து, ஒரு மணி நேரம் தனிமையில் பேசினோம் என, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அதில், எந்த உண்மையும் இல்லை. நாங்கள் ஜெயலலிதா வழியில் வந்தவர்கள். அ.தி.மு.க.,வின் வழியில் மட்டுமே என்றும் செயல்படுவோம். மற்றபடி கட்சி மாறுவேன் என்பதெல்லாம் நடக்கவே நடக்காத காரியம்,” என்றார்.