ADDED : பிப் 15, 2025 03:14 AM
சென்னை: “ஜாதிய வன்கொடுமையில் முதலிடத்தை பிடிக்க, உத்தர பிரதேச மாநிலத்தோடு, தமிழகம் போட்டி போடுகிறது,” என, வி.சி., பொதுச்செயலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மேலப்பிடாவூர் கிராமத்தில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அய்யாசாமி, கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் புதிய புல்லட் வாங்கியுள்ளார்.
இது பிடிக்காத மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், 'கை இருந்தால் தானே, புல்லட் ஓட்ட முடியும்' எனக் கூறி, அவரது கையை வெட்டியுள்ளனர். அய்யாசாமியின் வீட்டையும் உடைத்துஉள்ளனர்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, வி.சி., பொதுச்செயலர் ரவிக்குமார் எம்.பி., வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தை பிடிக்க மஹாராஷ்ராவுடனும், படிப்பறிவில் முதலிடத்தைப் பிடிக்க கேரளாவுடன் போட்டிபோடுகிறது.
அதேபோல், ஜாதிய வன்கொடுமையில் முதலிடத்தை பிடிக்க, உத்தர பிரதேசத்தோடு போட்டி போடுவது, வேதனை அளிக்கிறது. இது போன்ற ஜாதிய பயங்கரவாதிகள் மீது குண்டர் சட்டம் பாயாதா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

