செம்மண் அடுக்குகளில் வெள்ள நீர் புகுந்தது காரணமா? வயநாடு நிலச்சரிவு குறித்து வல்லுனர்கள் கருத்து
செம்மண் அடுக்குகளில் வெள்ள நீர் புகுந்தது காரணமா? வயநாடு நிலச்சரிவு குறித்து வல்லுனர்கள் கருத்து
ADDED : ஜூலை 31, 2024 01:18 AM

சென்னை:வயநாட்டில் மலைகளில் செம்மண் அடுக்குகளில், அதிகபட்ச வெள்ள நீர் உள்வாங்கியதால், நிலச்சரிவு ஏற்பட்டதாக, பேரிடர் மேலாண்மை துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், மூன்று கிராமங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில், குறிப்பிட்ட சில பகுதிகள், நிலச்சரிவு அதிகம் ஏற்படும் இடங்களாக வரையறுக்கப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான பகுதிகள், கேரளாவில் உள்ளன.
பொதுவாக நிலச்சரிவை, புவியியல் சார்ந்த நிகழ்வாக, வல்லுனர்கள் பார்க்கின்றனர். ஆனால், பாறைகள் அதிகம் காணப்படும் மலைகளில், நிலச்சரிவு எளிதாக ஏற்படுவதில்லை. களிமண் மற்றும் சேறு அதிகமாக உள்ள மலைகளில், மழைக்காலத்தில் நிலச்சரிவுகள் அதிகமாக ஏற்படுகின்றன. மலைப் பகுதிகளில் மண் அடுக்கு குறித்த புரிதல் இன்றி, மனித நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது, நிலச்சரிவு சம்பவங்களில் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.
சென்னை அண்ணா பல்கலை காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஏ.ராமச்சந்திரன் கூறியதாவது:
காலநிலை மாற்றம் ஏற்படும்போது, வளிமண்டலத்தின் கீழடுக்கில் இருந்து, மேல்நோக்கிச் செல்லும் காற்றின் அழுத்தம் குறையும். இதன் காரணமாக, மேகக் கூட்டங்கள் பரவலாவது தவிர்க்கப்பட்டு, ஒரே இடத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது.
அதிக மழை ஒரே இடத்தில் பெய்யும்போது, அதை சமாளிக்கக்கூடிய வகையில், அந்த பகுதி இருக்க வேண்டும். ஒருவேளை அதிக மழையை தாங்கும் நிலையில், ஒரு பகுதி இல்லை என்று தெரிய வந்தால், வெள்ள நீர் விரைவாக வெளியேற, வழிகளை ஏற்படுத்த வேண்டும்.
70 அடி உயரத்துக்கு செம்மண்
மேற்கு தொடர்ச்சி மலையில், வயநாடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மலைகள், செம்மண் அடுக்குகள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கு, 60 முதல் 70 அடி உயரத்துக்கு செம்மண் அடுக்குகள் காணப்படுகின்றன. இத்தகைய மண் அடுக்குகள் உள்ள பகுதியில், இயற்கையாகவே நீரோட்ட பாதைகள் இருக்கும். அதைத் தாண்டி, அதிகமாகப் பெய்யும் திடீர் மழையால், அதிக அளவு நீர் உள்வாங்கப்படுகிறது.
அதிக அளவு நீர் உள்வாங்கப்படும் நிலையில், அது வெளியேறும் வழி, எங்காவது தடைபட்டிருக்கலாம். இதனால், மழைநீர் உள்ளேயே தங்கும்போது, மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து, குழைவுத் தன்மை ஏற்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கும்போது, அந்த மலையில், குறிப்பிட்ட சில பகுதிகள் ஒட்டுமொத்தமாக சரிந்து விடுகின்றன.
அந்தப் பகுதியில் நிலம் சரியும்போது, கட்டடங்கள் மொத்தமாக புதைந்து விடுவதால், உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
செம்மண் அடுக்குகள் உள்ள பகுதிகளில், 30 செ.மீ.,க்கு மேல் மழை பொழியும் நிலையில், அங்கு பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருத்தம் தேவை
பொதுவாக இதுபோன்ற பேரிடர் ஏற்படும்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருக்கு மட்டுமே அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. யதார்த்த நிலவரப்படி பார்த்தால், பேரிடர் ஏற்படும் மாவட்டத்தில், கலெக்டரால் மட்டுமே நிவாரணப் பொருட்களை ஏற்பாடு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, மாநில எல்லைகளை கருத்தில் கொள்ளாமல், அக்கம் பக்கத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், பேரிடர் மேலாண்மைக்கான கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நிவாரண உதவிகளை விரைவாக திரட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முடியும்.
இத்துடன் அக்கம் பக்கத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பேரிடர் மேலாண்மை பணிக்கான அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.