கருணாநிதி பேனா நினைவு சின்னம் தமிழக அரசே ஆய்வு செய்வது சரியா?
கருணாநிதி பேனா நினைவு சின்னம் தமிழக அரசே ஆய்வு செய்வது சரியா?
ADDED : செப் 10, 2024 05:58 AM

சென்னை: 'கருணாநிதி பேனா நினைவு சின்னம் திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசிடமே, அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு நடத்த சொல்வது நியாயமானதா' என, மத்திய அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
'சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரை, கடல் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதி என, மீன்வள துறை அறிவித்துள்ளது. இந்த கடற்கரை பகுதியில், புயல், சுனாமிக்கு வாய்ப்புள்ளது.
'எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் உள்ளிட்ட, எவ்வித கட்டுமானங்களையும் அனுமதிக்க கூடாது' என, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அனுமதி
அதை விசாரித்த தீர்ப்பாயம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு, மத்திய,- மாநில சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றத்துறை செயலர்கள், தமிழக தலைமை செயலர்.
சென்னை மாநகராட்சி ஆணையர், பொதுப்பணி, மீன் வளத்துறை செயலர்கள், சென்னை கலெக்டர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
சென்னை மெரினா அருகே கடலில், கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க, 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
அதில், 'பேனா சின்னம் அமைப்பதால், கடலரிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை ஆய்வு செய்து, மத்திய சுற்றுச்சூழல் துறை மண்டல அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்பதும் ஒரு நிபந்தனை.
நியாயமாக இருக்குமா?
பேனா நினைவு சின்னத்தை செயல்படுத்தும் தமிழக அரசிடமே, திட்டத்தால் கடல் அரிப்பு ஏற்படுமா என ஆய்வு நடத்த, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
திட்டத்தை செயல்படுத்துவரே, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினால், அது வெளிப்படை தன்மையுடன் நியாயமானதாக இருக்குமா? கட்டுமான பணிகள் நடந்த பின் பாதிப்பு கண்டறியப்பட்டால், மத்திய அரசு என்ன செய்யும்?
எந்தவொரு திட்டமாக இருந்தாலும், இனி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையே ஆய்வு நடத்தி, அதற்கான செலவை, திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
ஏற்கனவே, மத்திய அரசு விதித்த நிபந்தனையின் படி, தமிழக அரசு விரைந்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை, வரும் அக்டோபர் 30-ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.