ADDED : ஜூலை 11, 2024 01:50 AM
சென்னை:'அரசியல் கட்சியின் கொடிக்கம்பம் வைத்த போது, மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்துக்கு அளித்த இழப்பீடு போதுமா?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
விழுப்புரத்தில் நடந்த தி.மு.க., பிரமுகர் இல்லத் திருமணத்துக்கு, அமைச்சர் பொன்முடியை வரவேற்று, பேனர், கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டன.
அப்போது, இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன், மின்சாரம் தாக்கி பலியானான். கடந்த 2021 ல் சம்பவம் நடந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்கவும், பலியான சிறுவனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரி, மோகன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
நிலுவையில் இருந்த இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
தி.மு.க., தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை ஆஜராகி, ''சிறுவனின் குடும்பத்துக்கு, கட்சி சார்பில் 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கிரிமினல் வழக்கு விசாரணை, தனியாக நடக்கிறது,'' என்றார்.
அப்போது, 'மற்ற சம்பவங்களில் மரணமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ஒப்பிடும் போது, சிறுவனின் மரணத்துக்கு வழங்கப்பட்ட தொகை போதுமா?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
பேனர்கள் குறித்த விதிகளை அமல்படுத்த, உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற முதல் பெஞ்ச், விசாரணையை, நாளைக்கு தள்ளி வைத்தது.

