அணி மாறுகிறாரா கொ.ம.தே.க., ஈஸ்வரன் பழனிசாமியை புகழ்ந்ததால் சந்தேகம்
அணி மாறுகிறாரா கொ.ம.தே.க., ஈஸ்வரன் பழனிசாமியை புகழ்ந்ததால் சந்தேகம்
ADDED : மார் 05, 2025 08:39 PM
ஈரோடு,:பழனிசாமியிஐ புகழ்ந்ததன் வாயிலாக அ.தி.மு.க., அணிக்கு கொ.ம.தே.க., ஈஸ்வரன் அணி மாறுகிறாரா என்ற சந்தேகம், கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., - வி.சி., கட்சியினர் ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட் கேட்பதுடன், தமிழக அரசு செயல்பாடுகளை அவ்வப்போது விமர்ச்சித்து வருகின்றனர். இந்த வரிசையில் கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரனும் சேர்ந்து விட்டோரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வந்த ஈஸ்வரன் பேட்டி அளிக்கையில், ''தற்போதைய சூழலில் அ.தி.மு.க.,வை வழி நடத்த, அக்கட்சியின் பொதுச்செயலர் தவிர வேறு யாராலும் முடியாது,'' என புகழ்ந்து தள்ளினார்.
இந்த பேச்சு, கொங்கு பகுதிகளில் வீடியோவாக வெளியாகி, கடும் விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடிடு வெற்றி பெற்ற ஈஸ்வரன், திடுமென பழனிசாமிக்கு ஆதரவாக பேசுவது, அணி மாறும் எண்ணத்தில் சொல்லப்பட்டதா என்ற சந்தேகம், அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
கொ.ம.தே.க.,வினர் கூறியதாவது:
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள். ஆனாலும், சமீப காலமாக தமிழகத்தில் நடக்கும் கொலை, போக்சோ வழக்கு, போலீஸ் நடவடிக்கை, சீமான் வழக்கில் மெத்தனம், கூட்டணி கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் வழங்காமை உள்ளிட்ட விஷயங்களில் மற்ற கூட்டணி கட்சிகளைப் போலவே, கொ.ம.தே.க.,வுக்கும் தி.மு.க., மற்றும் தமிழக அரசு செயல்பாடுகள் மீது கொஞ்சம் அதிருப்தி இருக்கிறது. அதை நேரடியாக இல்லாவிட்டாலும், லேசுபாசாக அவ்வப்போது கட்சியினர் சொல்லி வருகின்றனர்.
தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினரோடும் தொடர்பில் இருப்பவர் ஈஸ்வரன். அவருக்கு அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உண்டு. அந்த வகையில் தான், அ.தி.மு.க., குறித்து நிருபர்கள் கேட்டதும், பழனிசாமியைத் தவிர வேறு நபர் அக்கட்சியை நடத்த தகுதியானவர் இல்லை என்ற ரீதியில் கருத்துச் சொன்னார். அதற்காக, அணி மாறுவதாக அர்த்தம் இல்லை. ஆனாலும், அவர் சொன்னது யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தத்தான் செய்யும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.