UPDATED : பிப் 27, 2025 06:32 AM
ADDED : பிப் 27, 2025 02:49 AM

நாடு முழுதும் லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழகத்தில் மட்டும் எட்டு லோக்சபா தொகுதிகள் குறையும் நிலை ஏற்படும் என்றும், இந்த விவகாரத்தில் கட்சி பாகுபாடு இன்றி, தமிழக உரிமையை மீட்டெடுக்க, வரும் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
'மறுசீரமைப்பு முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், தமிழகத்திற்கு மட்டுமல்ல; தென் மாநிலங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளும் குறையும் வாய்ப்பு உள்ளது.
ஆலோசனை
எனவே, தென் மாநிலங்களிலும் இப்பிரச்னையை முன்னிறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைமை கருதுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே.டி.ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தென்மாநில முதல்வர்களையும், அங்குள்ள பா.ஜ., எதிர்ப்பு தலைவர்களையும் சந்தித்து பேசும் திட்டமும் தி.மு.க.,வுக்கு உள்ளது.
விரைவில் தமிழக அமைச்சர்கள் குழு, இம்மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வரை, மத்திய அரசுக்கு எதிரான பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்த, தி.மு.க., தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம் மற்றும் தென்மாநில தலைநகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'ஏற்கனவே இப்படித்தான், இந்தியா முழுதும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சொல்லி, கோபாலபுரம் வீட்டின் முன் ஸ்டாலின் குடும்பத்தினர் திரண்டு நிற்க, மனித சங்கிலி போராட்டம் நடத்தியது தி.மு.க.,
'ஆனால், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தாமல், டாஸ்மாக் வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றனர்.
கொந்தளிப்பு
'எந்த கருத்திலும் உறுதியாக இல்லாமல் பெயரளவுக்கு மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது போல, இப்போதும் தொகுதி மறுசீரமைப்புக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்த தி.மு.க.,வால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் தான் எழுகிறது' என, தி.மு.க.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன
- நமது நிருபர் -.

