இன்னுமா நிதிநிலை சரியில்லை? முதல்வருக்கு கல்லுாரி ஆசிரியர்கள் கடிதம்
இன்னுமா நிதிநிலை சரியில்லை? முதல்வருக்கு கல்லுாரி ஆசிரியர்கள் கடிதம்
ADDED : பிப் 25, 2025 04:09 AM
சென்னை : அரசு கல்லுாரி ஆசிரியர் களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு உத்தரவிட்டு, நான்கு ஆண்டுகளான நிலையில், அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு, அது அமலாகாததால் விரக்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, முதல்வருக்கு பல்கலை ஆசிரியர் சங்கம் எழுதியுள்ள கடிதம்:
சென்னை, திருவள்ளுவர், பெரியார், பாரதியார், பாரதிதாசன், அண்ணாமலை பல்கலைகளின் இணைவு பெற்ற அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுகிறோம். கடந்த 2016, ஜனவரியில், தமிழக கல்லுாரி, பல்கலை ஆசிரியர்களுக்கான புதிய ஊதிய முறை அமலானது. அப்போது, அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் அமலானது.
நிதிநிலை சரியில்லை என்ற காரணம் கூறி, அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணப்பலன்கள் நிறுத்தப்பட்டன. கடந்த, 2021, ஜன., 11ல் வெளியிடப்பட்ட அரசாணையில், அரசு கல்லுாரி, அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணப்பலன் குறித்து பொதுவானதாக இருந்தது.
ஆனால், நிதிநிலையை காரணம் காட்டி, மீண்டும் எங்களுக்கான பணி மேம்பாடு நிராகரிக்கப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
நான்கு ஆண்டுகளாக கூறிய நிதிநிலை சரியாகவில்லை என்ற காரணத்தைக் கூறாமல், உடனடியாக, எம்.பில்., - பிஎச்.டி., பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.