ADDED : பிப் 15, 2025 03:13 AM

சென்னை: 'திருநெல்வேலி மருத்துவமனையில் உயிரிழந்த 4 வயது சிறுவனுக்கு, தமிழக அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் இறந்த செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், நான்கு ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை, போதிய டாக்டர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. டாக்டர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்; டாக்டர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளை, தொடர்ந்து பறிகொடுத்து வருகிறோம்.
இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில், தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம்கூட மனசாட்சி இன்றி, பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க அமைச்சருக்கு கூச்சமாக இல்லையா? இத்தகைய அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா, தெரியாதா?
திருநெல்வேலி மருத்துவமனையில் இறந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, தி.மு.க.,வில் இருந்து உதவி செய்யப்போவதாக கூறியிருப்பது, அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? தி.மு.க., கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகி விடுமா? அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை; அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை.
அரசின் சுகாதாரத் துறை ஒழுங்காக செயல்பட, இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.