முதல் முறை சிறைக்கு வருபவர்களை தனியாக அடைக்க ஏற்பாடு உள்ளதா? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
முதல் முறை சிறைக்கு வருபவர்களை தனியாக அடைக்க ஏற்பாடு உள்ளதா? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
ADDED : செப் 06, 2024 01:32 AM
மதுரை:உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின், முன்ஜாமின் மனுக்கள் குறித்து, நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரணை செய்து வருகிறார். கடந்த வாரம் சில மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.
அதில், கடந்த மாதம் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டவர்கள், மீண்டும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்ததை அறிந்து, அதுகுறித்து விசாரித்தார். அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
முதல் குற்றவாளியாக கைது செய்யப்படுவோர், சிறைக்குள் அடைக்கப்படும் போது, ஏற்கனவே தொடர் குற்ற வழக்குகளில் கைதானவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
அதுகுறித்து விளக்கம் கேட்க, மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் சதீஷ்குமாரை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அவர்கள் நேற்று ஆஜராகினர்.
டி.ஐ.ஜி., பழனி, “முதல் குற்றவாளிகளை வயது வாரியாக பிரித்து, சிறையில் வைத்து வருகிறோம்,” என்றார்.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
முதல் குற்றவாளிகளை தனியாக வைக்க ஏற்பாடு உள்ளதா? தண்டனை குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும்.
ஒன்றாக வைக்கும் போது, பழைய குற்றவாளிகளுடன் இணைந்து, தொடர் குற்றவாளியாக மாறி விடுகின்றனர்.
கஞ்சா குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும்.
முதலில், சிறு வழக்கில் சிறைக்கு செல்பவன், அங்கே உள்ள மொத்த வியாபாரிகளிடம் பழகி, பெரும் குற்றவாளியாக மாறி விடுகிறான்.
எனவே, இளைஞர்களை பாதுகாக்கும் விதமாக, முதல் குற்றச்செயல் புரிந்து சிறைக்கு வரும் குற்றவாளிகளை தனியாக அடைக்க, தமிழகம் முழுதும் ஏதேனும் ஏற்பாடு உள்ளதா? அவ்வாறு இருந்தால் அறிக்கை தாக்கல் செய்யுங்கள். நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்.
இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.