ADDED : ஆக 20, 2024 08:09 PM
சென்னை:'கொங்கு மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஈஸ்வரனுக்கு, அண்ணாமலை பற்றி பேச அருகதையில்லை' என, தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'அண்ணாமலை கொங்கு நாட்டிற்கு என்ன செய்தார்' என கொ.ம.தே.க., ஈஸ்வரன் கேட்கிறார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அரசியலில் களமிறங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை பட்டியலிட்டால், பக்கங்கள் போதாது.
பா.ஜ.,வுக்கு கை இல்லை, கால் இல்லை என்று கூறிய திராவிட கட்சிகளுக்கு மத்தியில், பா.ஜ., தலைமையில் கூட்டணி அமைத்து, அ.தி.மு.க.,வை பல இடங்களில் டிபாசிட் இழக்க செய்து, 18 சதவீத ஓட்டு வங்கியை தமிழகத்தில் வாங்கி காட்டியவர் அண்ணாமலை.
ஈஸ்வரனோ, கொங்கு மண்டலத்தில் தொண்டை கிழிய பேசி, கொங்கு மக்கள் கூட்டத்தை கூட்டி, வஞ்சக வலை வீசி, கொங்கு இனம் கோட்டையில் கொடியேற்றம் என சூளுரைத்து, கள் இறக்க சிறை நிரப்பும் போராட்டம் என, நாடகம் நடத்தினார்.
தி.மு.க.,வில் ஐக்கியமாகி, அக்கட்சி சின்னத்தில் வெற்றி பெற்று, ஒரு எம்.பி.,யுடன், தான் ஒரு எம்.எல்.ஏ.,வாகவும் கடந்த ஆறு ஆண்டுகளில் கொங்கு நாட்டிற்கு செய்த ஒரு நல்ல காரியத்தை, ஈஸ்வரானால் பட்டியலிட முடியுமா?
கீழ்பவானி வாய்க்கால் பிரச்னைக்கும், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்திற்கும் அறப்போராட்டம் நடத்தி, அரசை பணிய வைத்து வெற்றி கண்டது அண்ணாமலை தலைமையிலான தமிழக பா.ஜ.,
கொங்கு மக்களின் கோரிக்கைகளை மறந்து, சட்டசபையில் தி.மு.க.,வின் புகழ்பாடி, பதவி சுயநலத்தில் சுருங்கிப் போய் கொங்கு மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஈஸ்வரனுக்கு, அண்ணாமலை பற்றி பேச அருகதையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

